ஆகமதாபாத்: 

ல்லூரி நிகழ்ச்சிக்கு, அலுமினியான  ஜிக்னேஷ் மேவானி சிறப்பு விருந்தினராக  கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் சுயேட்சையாக வட்காம் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், வழக்கறிஞரான , சமூக போராளி என பன்முகத்தன்மை கொண்டவர்.

பிரதமர் மோடி அரசு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மேவானி  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செயல்பட்டு வரும், எச்கே கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க கல்லூரி முதல்வர் ஹமந்த்குமார் ஷா  முடிவு செய்தார்.

ஆனால், அவர் கலந்துகொண்டால், தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லூரி நிர்வாகம்,  அவரை அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், கோபமடைந்த முதல்வர் ஹமந்த்குமார் ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் இயக்கம் கொடுத்த மிரட்டல் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானியின் வருகை மறுக்கப்பட்டதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஹமந்த்குமார் ஷாவுக்கு ஆதரவாக துணை முதல்வர் மோகன்பாய் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். இவர்கள் இருவரும் அக்கல்லூரியில் தலா 15, 10 ஆண்டுகள் பணி புரிந்துள்ளனர்.

இதுகுறித்து ஹமந்த்குமார் ஷா கூறுகையில், அப்படி என்ன அரசியல் சூழ்நிலை தடையாக இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக-வின் அழுத்தம் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுக்கப்பட்ட தாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஹமந்த்குமார் ஷா  பதவி விலகியதை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.