மும்பை

சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை குறைந்து வருகிறது.

மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் பல வருடங்களாக ராயல் என்ஃபீல்ட் முதல் இடத்தில் இருந்து வந்தது. நாடெங்கும் இந்நிறுவனத்துக்கு 828 முகவர்கள் உள்ளனர். அத்துடன் கடந்த அக்டோபரில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் மேலும் 20 முகவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2016-17 ஆம் வருடம் இந்த நிறுவனம் உற்பத்தி 31% அதிகரித்தது.

ஆனால் இந்த வருடம் இந்த மோட்டார் சைக்கிள்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் ஜாவா மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் களத்தில் இறங்கியது என கூறப்படுகிறது. ராயல் என்ஃபீல்டைப் போலவே ஜாவா மோட்டார் சைக்கிள்களும் ரூ. 1.5 முதல் ரூ. 2 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை கடந்த மூன்று மாதமாக குறைந்து வரும் அதே நேரத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் தனது ஒன்பது மாத உற்பத்தியை இந்த மூன்று மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இரு மாடல்களும் ஒன்றுக்கொன்று மாறுபடவில்லை என்னும் போதிலும் ராயல் என்ஃபீல்டை விட ஜாவா அதிக வாடிக்கயாளர்களை ஈர்த்துள்ளது.

இது குறித்து ராயல் என்ஃபீல்ட் உற்பத்தி நிறுவனமான எய்ச்சர் மோட்டார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சித்தார்த் லால், “ராயல் என்ஃபீல்டுக்கு என ஒரு வலுவான விற்பனைக்கு பிறகான சேவைக் குழு உள்ளது. தற்போதைய நிலையில் பலரும் சந்தையில் வருகின்றனர். அவர்கள் எங்களை பார்த்து காப்பி அடிக்கின்றனர். ஆனால் மக்களுக்கு எது நிஜம் என்பது விரைவில் தெரிய வரும். ஆகவே விரைவில் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் பழைய விற்பனை நிலையை அடையும்.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.