புதுடெல்லி:

விதை வாங்குவதற்கே ரூ. 5 ஆயிரம் செலவாகிறது. இந்த நிலையில் ஓராண்டுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ. 6 ஆயிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

– காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் ஒரே குரலில் எழுப்பும் கேள்வி இதுதான்.


மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 75 ஆயிரம் கோடி செலவாகும் என்றும், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே இது அமலுக்கு வரும் என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

இதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

‘தி வயர்’ இணையம் வெளியிட்ட செய்தியின் விவரம் வருமாறு:

ஒடிசா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்குகிறார்கள். தெலங்கானா மாநிலத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்குகிறார்கள்.

இதைவிட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் குறைவுதான் என்கின்றனர் விவசாயிகள்.
தெலங்கானாவில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிக்கு, ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் தருகிறார்கள்.

ஆனால் மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் மட்டுமே தருவதாகச் சொல்கிறார்கள். நிலமில்லா 10 கோடி விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

ஒடிசாவில் நிலமற்ற விவசாயிளுக்கு ரூ.12,500 தருகிறார்கள். ஆனால் பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் இது பற்றி ஏதும் காணவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

யாருக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது குறித்து ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே ஆவணங்களை பராமரிக்கின்றன. பயனாளிகளை அடையாளம் காண்பதற்குள் தேர்தல் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும், இந்த விசயத்தில் மாநில அரசுகளின் உதவியை மத்திய அரசு நாடும் என்றும் கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதைப் போல், வருடத்துக்கு ரூ. 6 ஆயிரம் என்றால், தினமும் ரூ.17 கொடுத்து விவசாயிகளை மத்திய அரசு அவமதிப்பதாகவே தெரிகிறது என்று பொங்குகிறார்கள் விவசாயிகள்.