ஜார்க்கண்ட்:
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க ஓதுக்கீடு பெற்றார். முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு பெற்றதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து முதல்வர் தனது பெயரிலேயே முறைகேடாக சுரங்கம் ஒதுக்கீடு செய்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும், ஜார்க்கண்ட் கவர்னருக்கு, தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை அனுப்பி வைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது.

இதனால் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என பரபரப்பு எழுந்தது. இந்த அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி, ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்ற பயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ஹேமந்த் சோரன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ராய்பூருக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அம்மாநில சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்தார். இதற்காக இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பட்டு உள்ளது.