டில்லி,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று   ஓபிஎஸ் ஆதரவு எம்பியான மைத்ரேயன் கையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கோஷம் எழுப்பினார்.

 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும், சிபிஐ விசாரணைவேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், லெட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் அருகே சென்று பதாகைகளை ஏந்தி, கூச்சல் போட்டனர்.

அவர்களை  துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் இருக்கையில் சென்று அமரச் சொன்னார். ஆனாலும் சிறிது நேரம் இருக்கையில் அமராமல் மைத்ரேயன் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார்.

அதையடுத்து, துணைசபாநாயகர் குரியன், மைத்ரேயனை இருக்கைக்கு சென்று பேச அனுமதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து மைத்ரேயன் பேசினார். அப்போது, ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறிக்கையில் முரண்பட்ட தகவல்கள் உள்ளது என்றும், இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது,  மைத்ரேயனைப் பேசவிடாமல் சசிகலா ஆதரவு எம்.பி.யான விஜிலா சத்யானந்த் குறுக்கிட்டுப் பேசினார்.

இதனால், கோபம் அடைந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், விஜிலாவைக் கண்டித்தார்.

இதன் காரணமாக  மாநிலங்களவை சிறிது நேரம் அமளியாக காணப்பட்டது.