சென்னை:

“தமிழகத்தில்  பினாமி ஆட்சி நடைபெறுகிறது.  குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்கு சென்றவரின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடைபெறுகிறது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு என குற்றவாளி கூடாரத்தின் செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பல ஊழல்களை திமுக செய்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். எப்படியாவது ஆட்சியை கலைத்து விடலாம் என முயற்சி செய்து, அது கை கூடாததால், ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தங்கத்தை உரசி பார்க்கும் தகுதி உரைகல்லுக்கே உண்டே தவிர துருபிடித்த தகரங்களுக்கு இல்லை என்று ஸ்டாலின் இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கடுமையாக சாடியிருந்தார்.

அவரது அறிக்கை குறித்து, திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்   துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு துரைமுருகன்  ‘தினகரனா.. யார் அவர்?’ என்று  கேட்டார். அதற்கு செய்தியாளர்கள்,”அவர் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர்” என்று  பதிலளித்தனர். அதற்கு துரைமுருகன். “ அப்படியா? என்று, கேட்டு விட்டு, “துணைக்கெல்லாம் பதில் கூற முடியாது. துணைக்கெல்லாம்  பதில் கூறி எனது தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள முடியவில்லை” என்று பதில் அளித்தார். அவரது பதிலைக்கேட்டு அங்கிருந்த செய்தியாளர்களும், கட்சிக்காரர்களும்  சிரித்தனர். துரைமுருகன் தி.மு.க.வில் ”துணை”ப்பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் என்பதை நினைத்து சிரித்தார்களோ என்னவோ?