நாகப்பட்டினம்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 6 மாவட்ட மீனவர் சங்கங்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

அதில், கடந்த 3ந்தேதி நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது மற்றும்,

கடந்த 6-ந்தேதி ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, அதன் காரணமாக பிரிட்ஜோ (21) என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தது குறித்தும்  நாகை அக்கரைப் பேட்டை சமுதாய கூடத்தில் கடந்த 7-ந்தேதி நாகை தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று இறுதி கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது,

இலங்கை கடற்படையினை கண்டித்து ராமேசுவரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்ற மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வது என்றும்,

இலங்கை அரசை கண்டித்து 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அந்தந்த மாவட்டத்தில் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும்,

இன்று முதல் 6 மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப் பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து நாகை பகுதி மீனவர்கள் இன்றுமுதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர்.