டில்லி:

பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்  கடன் சுமை காரணமாக விமான சிப்பந்தி களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதுவரை சுமார் ரூ.6,500 கோடிக்கு மேல் கடன் சுமை அதிகரித்ததால் நிறுவனத்தின் அன்றாட அலுவல்களை நடத்துவதிலேயே  பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.

வங்கிக்குச் செலுத்தவேண்டிய தொகைகள், வேண்டிய முதலீடுகள், விமானிகளுக்கான சம்பளம் ஆகியவற்றை அளிப்பதே பெரும் சிரமத்திற்குரிய விஷயமாக மாறியது. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி காரணமாக 40 விமானங்களை இயக்க முடியாதளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டு மார்ச் மாத இறுதியுடன் முடிவடையவுள்ளதால் அதற்குள் நிர்வாகக் குழுவிலிருந்து நரேஷ் கோயல் விலகவேண்டும் எனப் பங்குதாரர்கள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து நிறுவனத்தில் தனது பங்கை 51 விழுக்காடாகக் குறைத்து தலைமைப் பொறுப்பி லிருந்து நரேஷ் கோயல் இன்றுடன் விலகுகிறார். அத்துடன் அவரின் மனைவியும் விலகியுள்ளனர்.

இதையடுத்து,    ஜெட் ஏர்வேஸின் நிர்வாகக் குழு முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

புதிய முதலீட்டாளர்களை உள்ளடக்கிய மாற்றியமைக்கப்பட்ட நிர்வாகம் சில மாதங்களில் உருவாக்கப்படும் என மற்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

நிறுவனத்தில் வினய் தூபே தலைமை செயல்அலுவலர்பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.