சோடா பாட்டில்,  கல்லெறி பேச்சுக்கு ஜீயர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரையை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் வாசித்தார். அக்கட்டுரை தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில் ஆண்டாளை தேவதாசி என்று தெரிவித்ததாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைரமுத்து தனது கருத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் உண்ணாவிரதம் இருந்தார். இரு நாட்களில் உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றார். பிறகு,  பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், “எங்களுக்கு கல்லெறியவும் தெரியும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்” என்று  பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக ஜீயரின் பேச்சு இருந்ததாக கூறி அவருக்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தனது சோடா பாட்டில்,  கல்லெறி பேச்சுக்கு ஜீயர், ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இவரது சோபாட்டில், கல்லெறி பேச்சுக்கு  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். அதைத் தவறாக நினைக்க வேண்டாம். ஆன்மீகப் பெரியார்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது” என்று தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

Jeeyar Apologies for his  SodaBottle speech