காங்கிரசின் உறவை முறித்து பாஜகவுடன் உறவை ம ஜ த தொடங்குகிறதா?

Must read

பெங்களூரு

ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து காங்கிரசின் உறவை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர மஜத விரும்புவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

கர்நாடகாவில் அமைந்திருந்த மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 16 உறுப்பினர்கள் ராஜினாமாவை ஒட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அரசு கவிழ்ந்து பாஜக நேற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராகப் பதவி ஏற்றுள்ள பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக ஊடகங்களில் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர மஜத விரும்புவதாகச் செய்திகள் வந்துள்ளன. முன்பு காங்கிரஸுடன் இருந்ததைப் போல் கூட்டணி அரசாக இல்லாமல் பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் எனச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜி டி தேவே கவுடா இவ்வாறு உறுப்பினர்கள் சிலர் விரும்புவது உண்மை எனவும் அது குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி முடிவு செய்வார் எனத் தெரிவித்துள்ளார். ஒரு அரசியல் ஆர்வலர், “இந்த முடிவு பாஜகவுக்கு மட்டுமின்றி காங்கிரசுக்கும் நன்மை அளிக்கும். பாஜக இதன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.

பழைய மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல காங்கிரஸ் தொண்டர்கள் மஜத உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியுடன் உள்ளனர். இதனால் பல தொகுதிகளில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை ஆதரித்ததால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் சுமலதாவுக்கு வாக்களித்துள்ளனர்.

இந்த முடிவு மஜதவுக்கு உதவுமா எனக் கேட்டால் ஆம் என்றும் கூறலாம். இல்லை எனவும் கூறலாம். தற்போதைய நிலையில் கட்சியின் வீழ்ச்சியில் இருந்து இந்த முடிவு காற்றும். ஆனால் மஜதவை உடைக்க பாஜக நிச்சயம் முயலும். அது மட்டுமின்றி மஜத தலைவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள் என்னும் எண்ணம் மக்கள் மனதில் உண்டாகும்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article