சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வ ருகிறது. இதில் 2வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு பதிலை கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இன்று 2வது நாளாக இன்றும்  ஆஜராகினார்.

ஏற்கனவே நேற்று காலை, மாலை என இரு வேளையும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று கூறியவர்,  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், அதற்கு பின்னர் அவரை பார்க்க வில்லை என்றும் கூறினார். நேற்று மட்டும் ஓபிஎஸ்-சிடம்  78 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் இன்றும் விசாரணைக்கு ஆஜனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,  அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது எனக்கு தெரியும் என்று கூறினார்.

மேலும் அப்போலோ மருத்துவமனையில்  ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அவரது உடல்நலம் குறித்து நீங்கள் யாரிமும் கேட்கவில்லையா  என்ற கேள்விக்கு,  அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை  கூறினார். அப்போதெல்லாம் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவலை தான்,  சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில்  பேசவில்லை என்றார்.

அதேவேளையில், அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறினார்.

டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன் அவரை நான் உள்பட 3 அமைச்சர்கள் நேரில் பார்த்தோம் என்று கூறியவர், டிசம்பர் 4ந்தி அன்று ஜெய லலிதாவை சந்திக்காமல், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியை சந்தித்தது குறித்து நினைவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 4ந்தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த பின் இதய துடிப்பை தூண்டும் சிபிஆர் சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது என்று கூறியவர், ஆனால், மாலை 5.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு  எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாக கூறினார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….