சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி 4 நாட்கள் பொதுக்கூட்டங்களை நடைபெறும் என இபிஎஸ் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி, பிப்ரவரி 24ந்தேதி,  28–ந் தேதி, மார்ச் 1, 2–ந் தேதி  ஆகிய 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும்,  24–ந் தேதி அன்று  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஆர்.கே.நகரிலும், துணை முதல்வர்  ஓ.பி.எஸ்.  போடிநாயக்கனூரிலும் பிரசாரம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த மாபெரும் மக்கள் தலைவி புரட்சித் தலைவி அம்மாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகின்ற 24.2.2021, 28.2.2021, 1.3.2021 மற்றும் 2.3.2021 ஆகிய 4 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், அம்மாவின் பிறந்த நாளான 24.2.2021 அன்று ஆங்காங்கே அம்மாவின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.