டெல்லி: பிரதமர் மோடி தலைமையில்  நிதிஆயோக் கவுன்சிலின்  6வது  கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பங்கேற்ற நிலையில்,  பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், நிதி ஆயோக் அதிகாரிகள், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல்முறையாக லடாக் யூனியன் பிரதேசமும் பங்கேற்றது.

தமிழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாக பணியாற்றுவது அவசியம். காலம் கடந்த சட்டங்கள் நீக்கப்பட்டு, எளிதாகத் தொழில் செய்வதற்கு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். தற்சார்பு இந்தியா திட்டத்தில், தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளித்து ஓர் அங்கமாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் துறையின் பங்களிப்பை அரசு மதிக்க வேண்டும் என்றார்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்படும். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் இன்னும் அர்த்தமுள்ளதாக மாறும்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து பணியாற்றுவதைப் பார்த்தோம். கொரோனாவை வென்று, உலகின் முன் இந்தியாவைப் பெருமைப்படுத்தினோம். இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடப்போகிறோம். ஆதலால், இந்த நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் முக்கியமானது.

ஏழைகளுக்கு வீடு கிடைக்க செய்வதே நமது இலக்கு. தற்போது நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிய வீடு கட்டுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்வதற்காக உழைத்து வருகிறோம். ஜல்ஜீவன் திட்டங்கள் மூலம் கிராமங்களில் பைப் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ஏழைகள் முன்னேறுவதற்காக வழங்கப்படும் இலவச கியாஸ் இணைப்பு, இலவச மின்சார இணைப்பு, சுகாதார வசதிகள், தடுப்பூசி போடுவது அதிகரிப்பு, வங்கிக்கணக்கு திறப்பது ஆகியவை அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதை நாம்மால் பார்க்க முடியும்.

2021 மத்திய பட்ஜெட் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள், தங்களின் பங்களிப்பை அளித்து வருகிறது. தன்னிறைவு இந்தியா திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். சுயசார்பு இந்திய உலகத்திற்கு உதவும்.

கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பத்தையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்கள், சிறிய வணிகங்களை வலுப்படுத்த வேண்டும்.

வேளாண் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகச் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். வீட்டில் இருந்து பணி செய்வதன் மூலம் தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கூறினார்.