சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் விசாரணை ஆணையத்தில் இன்று மருத்துவர் பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து  ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் சசிகலாவின் உதவியாளர், ஜெயலலிதாவின் கார் டிரைவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெ. மரணத்தில் உள்ள மர்மம்  குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, தீபக், சசிகலா குடும்பத்தினர், ஜெ. உதவியாளர், பாதுகாலர் உள்பட ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை  25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், தற்போது, ஐ.ஏ.எஸ்.அதிகாரி களான  வெங்கட்ராமன், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன், விஜயகுமார் ஆகியோருக்கு, விசாரணைக்கு ஆஜராக விசாரணை ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது.

வெங்கட்ராமன் (ஜெயலலிதாவின் முன்னாள் செயலர் – ஓய்வு)  ஜன.30ம் தேதியும்,  ஜெ. முதல்வராக இருந்தபோது  2ம் நிலை செயலராக இருந்த விஜயகுமார் ஜன.31ம் தேதியும்,  கலை மற்றும் கலாசார ஆணையராக இருக்கும் ராமலிங்கம் பிப்.1ம் தேதியும், முதல்வரின செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பிப்.,2ம் தேதியும் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,   சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் பிப்.5ம் தேதியும், ஜெயலலிதா கார் ஓட்டுனர் ஐய்யப்பன் பிப்.8 ம் தேதி ஆஜராக  வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.