சென்னை: தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்தனர். அப்போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர் பலகையை, கூட்டத்தில் கலந்துகொண்ட இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தன்னருகே வைத்துக்கொண்டார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக, தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் இன்று  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு முதலில் எடப்பாடி தரப்புக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு தாங்களும் கலந்துகொள்வோம் என போர்க்கொடி தூக்கியதால், அவரது தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற   வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் வைக்கப் பட்டிருந்த அதிமுக பெயர் பலகை அருகே, ஓபிஎஸ் தரப்பில்  கலந்துகொண்ட கோவை செல்வராஜ் உட்கார்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் எடப்பாடி தர்ப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, ஜெயக்குமார் அதிமுக பெயர் பலகையை தங்களது இருக்கை அருகே இழுத்து வைத்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் அருகருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியது.