புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, கடந்த 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அலகாபாத்தில்(தற்போதைய பிரயாக்ராஜ்) பிறந்தார். குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதால், நேருவின் பிறந்தநாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் நாடு முழுவதும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி சாந்திவான் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “பண்டித நேரு நமது தேசத்தின் ஒற்றுமைக்கும், நமது தேசத்தின் பன்முகத்தன்மைக்கும், நமது தேசத்தின் செழுமைக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வழங்கியவர். அவரது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தியாகமும் உண்மையான தேசியத்தை எடுத்துக்காட்டுகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.