கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்படும்த பொருட்கள்  தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அறிவுத்திறனையும்  உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்து வருகிறது.

கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை ஏராளமான அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  சிவப்பு பானை, உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது.

இந் தநிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்வின்போது தந்தத்தில் ஆன சீப்பு கிடைத்தது, பின்னர்,  6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்பில்  தங்கக் கம்மல்  கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.