சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கலைஞர் அரசு கலை கல்லூரி என மாற்றப்படும் என  அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 23ந்தேதி முதல்  மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை குறித்த விவாதத்தின்போது பேசிய  கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரிக்கு முன்னதாக கலைஞர் அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் இருந்ததாகவும், அதனை தற்போது பின்பற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலோடு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் அரசு கலை கல்லூரி என பெயர் சூட்டப்படுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கருணாநிதி பெயர் அறிவித்ததற்கு திருவண்ணாமலை மக்கள் சார்பில் நன்றி என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

இந்த விவாதத்தில் வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கூறிய கருத்துக்கு பதில் அளித்துள்ள அவர், திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் திராவிட இயக்க கொள்கைக்கு எதிரான கருத்துகள் இருந்தது என்றும், அது தற்போது நீக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.