மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பலகலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

10 ஆண்டுகளாக சிறையில் இருந்த சாய்பாபா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவரது கணினியில் மாவோயிஸ்டுகள் தொடர்பான பதிவுகள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மார்ச் 5 ம் தேதி வழங்கிய தீர்ப்பில் மகாராஷ்டிரா காவல்துறையால் சாய்பாபா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நாக்பூர் சிறையில் இருந்து நேற்று சக்கர நாற்காலியில் வெளியில் வந்த மாற்றுத் திறனாளியான சாய்பாபா செய்தியாளர்களைச் சந்தித்தார், “2014 மே மாதம் நான் சிறைக்குச் சென்றபோது, ​​நான் ஆரோக்கியமான நபராக இருந்தேன். எனக்கு போலியோ மட்டுமே இருந்தது.

ஆனால் இப்போது எனக்கு இதயக் கோளாறுகள், கணையம் மற்றும் பல தசை நோய்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல அறுவை சிகிச்சைகள் செய்யுமாறு மருத்துவர் என்னிடம் கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று கூறிய சாய்பாபா தனது உடல் நலக்குறைவு காரணமாக சிறை நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“எனது இதயம் 55 சதவீதம்தான் வேலை செய்கிறது.ஆனால் மருத்துவர் சொன்ன பிறகும் ஏன் சிகிச்சை அளிக்கவில்லை என்று புரியவில்லை.என்னால் கழிவறைக்கு (தனியாக) செல்ல முடியாது, ஆதரவில்லாமல் குளிக்க முடியாது. நான் சிறையில் இருந்து உயிருடன் வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை” என்று உருக்கமாக கூறினார்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக போராடியதற்காகவே தான் கைது செய்யப்பட்டதாகவும். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

2017 ம் ஆண்டு இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை கடந்த மார்ச் 5 ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து ஜி.என். சாய்பாபா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு தீவிரம் காட்டி வருகிறது.