டெல்லி:  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த உயர்வு,  ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மத்தியில் பல்வேறு மாநிலங்களுக்கும் பறந்து செல்லும் பிரதமர் மோடி, பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பதோடு, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வருகிறார். இதனிடையே முக்கிய வாக்கு வங்கியான அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மனம் குளிரச்செய்யும் வகையில், இன்றைய தினம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில்  மார்ச் 7ந்தேதி அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முன்தேதியிட்டு நடப்பாண்டு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இதுதொடர்பாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெரிவித்துள்ளார். 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பின் மூலம் அரசு கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடி கூடுதலாக செலவாகும்.

முன்னதாக 2023 அக்டோபரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், ஜூலை 1, 2023 நாளிட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த அகவிலைப்படி 4 சதவீத உயர்ந்தப்பட்டு மொத்தம் 46 சதவீதம் பணப்பலனாக உரியோருக்கு சென்று சேர மத்திய அரசு வழி செய்திருந்தது.
இந்த நிலையில், தற்போது அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வால், நாடு முழுவதும் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்  பலனடைவார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு.