கன்னியாகுமரி: தமிழகத்தில் திமுகவினர் மீது நடத்தப்படும் வருமான வரித் துறை சோதனை அரசியல் நாடகம், இது அனைவருக்கும் தெரியும்  என தமிழக  அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது, தமிழக பொதுப்பணித்துறைஅமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறியவர்,  இந்த வருமான வரித்துறை சோதனைகளை பொதுமக்களே எப்படி பார்க்கின்றனர், என்பது அனைவரும் அறிந்ததே. இது அரசியல் நாடகம். மக்கள் பணியை செய்யவிடாத ஒரு மத்திய அரசு, மக்கள் பணி செய்வதற்கு இதுபோன்ற தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது ஓர் அரசியல் நாடகம் என்பது அனைவருக்குமே தெரியும்.

முதலில் மத்திய அரசு அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கக்கூடிய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது. அவர்களுக்கு இந்த சோதனை பொருந்துமா? அவர்களுக்கு ஏன் இது பொருந்தவில்லை? இதுகுறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றவர்,  இன்றைக்கு தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 28 மசோதாக்கள் ஆளுநரிடம் காத்திருக்கின்றன. அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு வழி இல்லை. தமிழக அரசும், கேரள அரசும் இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது என்றார்.