பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது.

“இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் வரை மொபைலில் உள்ள மைக்ரோஃபோனை வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகிறது” என்று ட்விட்டர் நிறுவன பொறியியல் பிரிவு இயக்குநரான ஃபோட் டபிரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை” என்று அவர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டிருக்கும் இந்த பதிவு இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளது.

“இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழை என்று நாங்கள் நம்புகிறோம், இது அவர்களின் தனியுரிமை டாஷ்போர்டில் உள்ள தகவலை தவறாகப் பயன்படுத்துகிறது, மேலும் இது குறித்து ஆராய்ந்து சரி செய்யுமாறு கூகுளிடம் கேட்டுள்ளோம்” என்றும் இந்த பிரச்சனை மென்பொருள் பிழையாக இருக்கலாம் என்றும் WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் விரிவான தரவு பாதுகாப்பு மசோதா இன்னும் இல்லை என்ற போதிலும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.