ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று 2019 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி எம்ஆர் ஷா, நீதிபதி கிருஷ்ணா முராரி, நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் “ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளது.