திருப்பதி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி பண்டிகைகளையொட்டி தொடர் விடுமுறை இருந்தது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, திருவிழாவை சிறப்பித்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பினர். அதுபோல, ஸ்ரீஹரகோட்டா விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானிகள், ஊழியர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டு, பணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், சிலருக்கு உடல்நலம் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வந்த சோதனை முடிவுகளில் மேலும்  152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இஸ்ரோ, ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையில், பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  இருப்பதால், திட்டமிட்டபடி, செயற்கை கோள்களை செலுத்தும் பணி  காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதிய  இஸ்ரோ தலைவராக பதவியேற்ற சோமநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆந்திராவில் கடந்த 7 மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று 10,000ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,522 ஆக அதிகரித்துள்ளது. இதை அடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.