டில்லி

தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குத் தனிமை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   அதில் ஒன்று தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் சோதனையில் தொற்று உறுதி என கண்டறியப்பட்டால் தனிமை விடுதியில் இருப்பது அவசியம் ஆகும் 

இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது.  இதையொட்டி மத்திய அரசின் சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை நேற்று அறிவித்துள்ளது.   இந்த புதிய விதிகளின்படி தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்து சோதனையில் தொற்று உறுதி ஆனால் வழக்கப்படி சிகிச்சை பெற வேண்டும் எனவும் தனிமை விடுதி கட்டாயம் இல்லை எனவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி சர்வதேச அளவில் பயணம் செய்வோருக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.   சர்வதேச பயண விதிகளின்படி ஏற்கனவே கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும் என உள்ளது.   இந்நிலையில் அவர்களும் தனிமை விடுதியில் இருக்க வேண்டிய கட்டாயம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சர்வதேச பயணிகள் வீடுகளிலேயே 7 நாட்கள் இருக்க வேண்டும் என்பதும் 8 ஆம் நாள் மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்னும் விதிமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.