டில்லி

ஸ்லாமியப் பெண்கள் இனி ஆண் துணை இன்றி தனியே ஹஜ் யாத்திரை செய்யலாம் என மோடி அறிவித்துள்ளார்.

நெடுங்காலமாக ஆண் துணையின்றி இஸ்லாமியப் பெண்கள் தனியே ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி வழங்குவதில்லை.     ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியப் பெண்கள் தனியே ஹஜ் செல்ல விண்ணப்பித்து வருகின்றனர்.   ஆனால் இவர்களுடைய விண்ணப்பம் நிராகிரிக்கப் படுகின்றன.   இந்த வருடம் மட்டும் சுமார் 1300 இஸ்லாமியப் பெண்கள் தனியே ஹஜ் பயணம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வானொலியில் மோடி உரையாற்றினார்.   அவர் தனது உரையில், “பல ஆண்டுகளாக ஆண்களின் துணையுடன் மட்டுமே பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்ல வேண்டும் என ஒரு கட்டுப்பாடு உள்ளது.   இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியான இந்தக் கட்டுப்பாட்டை  யார் விதித்தார்கள் எனத் தெரியவில்லை.   நாடு சுதந்திரம் அடைந்து 70  ஆண்டுகள் ஆகியும் இது போல ஒரு கட்டுப்பாடு உள்ளது.    இது போன்ற ஒரு கட்டுப்பாடு இஸ்லாமிய நாடுகளிலும் இல்லை.

எனவே இந்தக் கட்டுப்பாட்டை இந்த அரசு நீக்குகிறது.    இனி 45 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் துணையின்றி தனியே ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம்.    இந்த வருடம் 1300 இஸ்லாமியப் பெண்கள் தனியாக ஹஜ் பயணம் செய்ய அனுமதி கோரி உள்ளனர்.    பொதுவாக விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.   அதில் இருந்து இந்தப் பெண்களுக்கு விலக்கு அளித்து உடனடியாக அனுமதி வழங்கப்படும்.   இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.”  என கூறி உள்ளார்.