கோவை:
சா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் 11ம் தேதி கோவையில் செயல்பட்டு வரும் பிரபல யோகா மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ திடிரென மாயமானதாகக் கூறப்பட்டது. மேலும் செம்மேடு பகுதியில் சுபஸ்ரீ வேகமாக ஓடும் காட்சிகளும் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 6 தனிப்படைகள் அமைத்தும் சுமார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் காவல் துறையினரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அதே செம்மேடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்புப் படையினரும் உடலை மீட்டனர்.

அழுகிய நிலையில் இருந்தது சுபஸ்ரீ தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.