டில்லி

பீகாரின் அராரியாவில் பாஜக தோல்வி அடைந்ததை ஒட்டி அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஒருவர் பேசியதாக ஜீ தொலைக்காட்சியின் இந்தி செய்திப்பிரிவு வெளியிட்ட வீடியோவை எதிர்த்து புகார் பதியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மக்களவை இடைத்தேர்தலில் மூன்றிலும் பாஜக தோல்வி அடைந்தது.   பீகாரின் அராரியா தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தபின் ஒரு ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தொண்டர் ஒருவர் இந்தியாவை எதிர்த்து கோஷமிடும் வீடியோ வெளியானது.    அந்த வீடியோவில் ஒருவர் “இந்தியா விரைவில் துண்டாடப்படும்”  எனவும் “பாகிஸ்தான் வாழ்க” எனவும் கோஷமிடுவது பதிவாகி உள்ளது.

இந்த வீடியோவை பல இந்திய செய்திச் சேனல்களும் வெளியிட்டன.    அதை ஒட்டி “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லையா?” என ஒரு விவாதமும் நடைபெற்றது.   ஆஜ்தக், டைம்ஸ் நவ், ஜீ இந்துஸ்தான் உள்ளிட்ட பல தொலக்காட்சிகள் வெளியிட்ட இந்த வீடியோ உண்மையானது தானா என பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

அந்த வீடியோவில் உள்ளவரின் உறவினர்கள் “எதிராளிகள் கடினமான துன்பத்தை அளித்தாலும் ராஷ்டிரிய ஜனதா தள் வெற்றி பெறும்” என்னும் பொருள் பட அவர் இந்தியில் கோஷம் இட்டதாக தெரிவிக்கின்றனர்.      ஆனால் இந்த வீடியோவை வெளியிட்ட எந்த ஒரு செய்தித் தொலைக் காட்சியும் இத் உண்மை தானா என்பதை பரிசோதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மார்சி 16 அன்று ஜீ இந்துஸ்தான் என்னும் இந்தி செய்தி தொலைக்காட்சி “இஸ்லாமியர் வென்றதால் அராரியா தீவிரவாதிகளின் நாடாக மாறுமா?” என்னும் தலைப்பில் விவாதம் ஒன்றை நடத்தியது.  அப்போது இந்த வீடியோவை ஒளிபரப்பிய நெறியாளர் இந்த வீடியோ உண்மையானதா என தெரிவித்த படியே பல முறை ஒளிபரப்பினார்.   தீவிரவாதிகளின் நாடு என்னும் சொல் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதையொட்டி முன்னாள் அரசு அதிகாரியா ஆசிஷ் ஜோஷி என்பவர்  ஜீ இந்துஸ்தான் தொலைக்காட்சி குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.   செய்தி ஒளிபரப்பு கட்டுப்பாடு மையத்திடம் அவர் அளித்துள்ள புகாரில், “இந்த செய்தி தொலைக்காட்சியின் விவாதத் தலைப்பு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.    சமூகத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் உள்ள ஒரு செய்தி தொலைக்காட்சி இதுபோல நடந்துக் கொள்வது இந்திய சட்டத்துக்கு எதிரானது.  அதனால் இந்த தொலைக்காட்சி மீதும் அந்த நிகழ்வை நடத்திய நெறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.