சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்த காவலர் ஒருவர் அண்மையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரை உடலை சொந்த ஊருக்கு ஏற்றிச்சென்ற அதே ஆம்புலன்சில் சில நாட்கள் கழித்து சென்னை அயனாவரம் போலீஸ் எஸ்ஐயின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த எஸ்ஐயும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டவர்.

போலீசாரின் மனநிலை எந்த அளவுக்கு உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் வெளிக்கொண்டுவந்து கொட்டின. அதுவும் எந்த நேரத்தில்?

தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை கூட்டி, சிறப்பாக செயல்பட்டதாய் சொல்லி காவல் துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கும்போது.. இதே பொன்னான தருணத்தில்தான், போலீசார் கோர முகத்தை காட்டி நாட்டையே கதி கலங்க வைத்திருக்கும் ஒரு கொடூரமான சம்பவமும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் பாபாநாசம் பகுதியை சேர்ந்த ராஜ என்பவர் தன் மனைவி உஷாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி போகிறார். அப்போது துவாக்குடி கணேசபுரம் பெல் ரவுண்ட்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், ராஜாவின் வாகனத்தை மறிக்கின்றனர்.

ஹெல்மெட் அணியாததால் பதற்றமடைந்த ராஜா, வண்டியை நிறுத்தாமல் போகிறார். உடனே ஆத்திரமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான டீம் ராஜாவின் பைக்கை துரத்துகிறது.

பின்னர் ராஜாவின் பைக்கை வழிமறித்து ஆய்வாளர் காமராஜ் எட்டி ‘உதைக்கிறார். இதில் நிலை தடுமாறி ராஜாவும் உஷாவும் கீழே விழ, சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார் மூன்று மாத கர்ப்பிணியான உஷா. கணவர் ராஜா படுகாயங்களுடன் துடிக்க, பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே போலீஸ் டீம் ஒட்டு மொத்தமாக தப்பி ஓடிவிடுகிறது.

‘’கர்ப்பிணி பெண்ணை போலீசார் சாகடிச்சிட்டு ஓடுகிறார்கள்’’ என்று ஆத்திரமாய் தகவல் பரவ, சம்பவ இடத்திற்கு பொது மக்கள் அலைஅலையாய் திரள்கின்றனர். சாலை மறியல், போலீஸ் தடியடி என அடுத்த கட்ட பதற்றத்தை எட்டுகிறது திருச்சி.

காவல் ஆய்வாள்ர் எட்டி உதைத்து கர்ப்பிணிப்பெண் பலி என செய்தி தேசம் முழுவதும் மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் பரவுகிறது. அதுவும் எந்த நேரத்தில்? மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில்.

தமிழக காவல்துறை அண்மைக்காலமாய் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்ற வரி. காலம் காலமாய் எழுதப்பட்டு வருகிறது. இதன் அர்த்தம் என்ன? தரம் தாழவில்லை என்பதல்ல எந்த காலத்திலும் தரத்துடன் இருந்ததில்லை என்பதுதான்.

பொதுவாக ஆயுதங்களை பிரயோகிக்கும் அதிகாரம் பெற்ற ராணுவம், போலீஸ் போன்ற சீருடை பணியாளர்களுக்கும் பொது வெளி நடத்தை என்பதற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். உலக அளவில் ராணுவத்தின் கள எதேச்சதிகார போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.. கட்டுப்படுத்தவும் விரும்பமாட்டார்கள். அப்படி செய்தால் ராணுவத்தினரின் ஆற்றலுக்கு அணை கட்டுவது போலாகிவிடும் என்று சப்பை கட்டு கட்டுவார்கள் ஆட்சியாளர்கள்.

ஆனால் உள்நாட்டு பாதுகாப்பில் புழங்கும் போலீசார் விஷயத்தில் இந்த அலட்சிய போக்கு இருப்பதில்லை. மேற்கத்திய நாடுகளில், போலீசாருக்கு புலனாய்வு உள்ளிட்ட பல பயிற்சிகளோடு, குற்றவாளிகளாக இல்லாத பொது மக்களை எப்படி மரியாதையாக நடத்தவேண்டும் என்று நன்றாக சொல்லித்தருவார்கள்..

பொதுமக்கள் மத்தியில் அவர்களின் கௌரவம் பாதிக்காமல் சட்டபூர்வ கடமையை எப்படி ஆற்றவேண்டும் என்று போதிப்பார்கள்.

வெளிநாடுகளில் வாகன சோதனையின் போது, வாகனத்தை மறிக்கும் போலீசார், உள்ளே இருப்பவருக்கு காஷுவலாக வணக்கம் வைத்துவிட்டு, அதன் பிறகே ‘’தயவுசெய்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தை காட்டுகிறீர்களா?’’ என்ற ரீதியில் தேவையான ஆவணங்களை கேட்பார்கள்.

ஆனால் நம்ம போலீஸ் விஷயத்திலோ எல்லாமே தலைகீழ். சில விதிவிலக்கான போலீசாரைத் தவிர

பெரும்பாலானவர்களின் பாஷையே, எடுத்தவுடன் வாய்யா, போய்யா வாடா போடாதான்.. தவறிழைக்காத பொதுமக்களை பொதுமக்களாக நடத்தவேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாததே இதற்கு காரணம்.

இதே போலீஸ்காரர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அங்குள்ள ஊழியர்கள் டேய் காலை நீட்றா, கையை தூக்குடா என்றால் சும்மா இருப்பார்களா?

பொதுவாக, போலீசாரின் முதற்கட்ட அணுகுமுறையில் சாதாரண தொணிதான் வேண்டும். குற்றம் நடந்திருப்பதும் அதை மறைக்க ஒருவர் மழுப்பப்பார்க்கிறார் என்றால்தான் அடுத்த கட்டத்திற்கு கெடுபிடி என போகவேண்டும்.

வாகன சோதனையின்போது, போலீசார் கேட்கும் எல்லா ஆவணங்களையும் ஒருவர் காட்டினால், அவரை மதித்து அனுப்ப வேண்டும். ஆவணம் இல்லை யென்றால் சட்டம் என்ன செய்கிறதோ அதைசெய்துவிட்டுபோகவேண்டும்.

ஆனால் இங்கு பிரச்சினையே போலீசார், சட்டமும் அவர்களே.. முடிவை தீர்மானிக்கும் நீதிபதிகளும் அவர்களே.. என மாறிவிடுவதால்தான். எதற்காக இப்படி மாறுகிறார்கள், நீதியை நிலைநாட்டவா? வேறென்ன லஞ்சத்திற்காகத்தான்.

போலீஸ் என்றாலே லஞ்சம் என்றாகிவிட்ட நிலையில், ஒன்றை மறந்துவிடுகிறோம். எந்த போலீஸ்காரரும் எடுத்த எடுப்பில் லஞ்சம் வாங்குவதில்லை.. மிடுக்குடன் பணியாற்றத்தான் நினைக்கிறார்கள். கை நீட்டி காசுவாங்க கூச்சப்படுகிறார்கள். ஆனால் இவர்களே பின்னர் எப்படி அடித்துப்பிடுங்கும் வழிப்பறி கொள்ளையராக மாறுகிறார்கள்?

வீட்டிலிருந்து அவர்கள் அலுவலகத்திற்கு இடையிலான வாழ்வியலை அலசினால் இதெற்கெல்லாம் விடை கிடைக்கும்.

லஞ்சம் வாங்காத ஒருவரை முதற்கட்டமாக அதில் தள்ளி விடுபவர்கள் இரண்டு தரப்பினர். முதல் தரப்பு உடன் பணி புரிபவர்கள். லஞ்சம் வாங்காமல் தணித்து நிற்பவனை, இடையூறாக கருதுபவர்கள், அவனை எப்படியும் தங்கள் கோஷ்ட்டியில் சேர்த்துவிட துடிப்பார்கள்.

ஒன்று, அவனும் லஞ்சக்கூட்டணியில் சேர்ந்துவிடவேண்டும். இல்லையென்றால், ‘’நீங்கள் எப்படியாவது வாங்கிக்கொள்ளுங்கள். நான் பிரச்சினை எதுவும் செய்ய மாட்டேன்’’ என்று பத்திரம் எழுதிக்கொடுக்காத குறையாய் வேடிக்கையாளனாக மாறிவிடவேண்டும்.. எத்தனை காலத்திற்கு இப்படியே வெறுங்கையுடன் இருப்பான் என்பது அவனது மனோதிடத்தையும் பொருளாதார தேவையையும் பொறுத்தது.

இப்படி கை நீட்டாத வேடிக்கையாளனுக்கு இரண்டாவது சத்திய சோதனை அவன் குடும்பத்தில்தான். லஞ்சப்பணம் வேண்டாம் என்று சொல்வார்களா என்றால் கிடையவே கிடையாது. லஞ்சப்பணத்தில் கிடைக்கும் நகைகள், பொருட்கள், ஆடம்பர வசதிகள் போன்றவற்றையெல்லாம் அவமானகரமாக பார்க்கும் போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

மற்ற லஞ்சப்பணத்தில் வளமாக வாழும் போலீஸ் குடும்பத்தினர் சுட்டிக்காட்டி, சுட்டிக்காட்டி மனைவிமார்கள் உசுப்பேற்றுவார்கள். லஞ்சம் வாங்காத போலீஸ்காரனை, பிழைக்கத்தெரியாதவன், கையாலாகாதவன், ஊர்ல உலகத்துல இல்லாத பெரிய யோக்கியன்.. என குடும்பத்திலேயே நிறைய பட்டங்கள் கொடுப்பார்கள்.

போலீஸ் குவார்ட்டர்ஸ் பக்கம் சென்றால், லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸ்காரருக்கு என்ன மாதிரியான மரியாதை கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்த அவமானங்களை எதிர்கொண்டு அடக்கியாண்டு இதையெல்லாம் மீறி சம்பள பணத்தில் மட்டுமே கம்பீரமாக வாழ முடிவது வெகு சிலரால் மட்டுமே.

ஆனால் வசதிகளை அள்ளித்தரும் லஞ்சம், திடீரென அதிர்ச்சி வைத்தியமாக மாறும்போது இதே போலீசார் குடும்பத்தின் நிலை என்ன? இப்போது திருச்சி கர்ப்பிணிப்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈனப்பிறவியாய் பார்க்கப்பட்டும் ஆய்வாளர் காமராஜின் குடும்பத்தினர் தெருவில் நிமிர்ந்து நடக்கமுடியுமா? வெளியே எங்கே சென்றாலு அடையாளம் காணப்பட்டுவிட்டால் ஊரே கூடி நின்று காறித்துப்பும்.

இதையெல்லாம் உணராமல்தான், தன் தேவைக்காக லஞ்சம் வாங்கும் போலீசார் அடுத்தகட்ட வெறியோடு மாறிப்போவதற்கு பின்னணியாக உள்ள விவகாரம்தான் எல்லாவற்றையும்விட அதிர்ச்சியானது.

அதாவது வேட்டையாடி அதில் மேலிடத்தில் பங்கை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொள்வது.

மேல் அதிகாரிகளின் செலவை பார்த்துக்கொள்வதில் ஆரம்பிக்கும் மகத்தான பணி, லாபத்தில் பங்கு கொடுப்பதில் போய் முடியும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விஐபி தனியாகவோ அல்லது குடும்பத்தோடே வருகிறார் என்றால் அவரை வரவேற்று வழியனுப்பும்வரை நடக்கும் செலவுகளை ஏற்க சில துறைகள் பொறுப்பேற்கும். அதில் முக்கியமானது காவல்துறை.

அந்த துறை எங்கே போவும்? யார் அதிகமாக சம்பாதிக்கிறார்களோ அவர்களை நோக்கியே ஒடும்.. மதுவிலக்கு ஒழிப்பு பிரிவில் உள்ள வளம் கொழிக்கும் அதிகாரிகளின் புலம்பலை கேட்டால் இதெல்லாம் புரியவரும்.

தன் தேவைக்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்கியவன் மேலதிகாரிக்கும் சேர்த்து வாங்கும்போது தனக்கும் கூடுதலாக இலக்கை வைத்துக்கொள்கிறான். இப்படித்தான் படிப்படியாக லஞ்சப்பேயாகவே போலீசாரின் பெரும்பான்மை தரப்பு மாறிவிட்டுள்ளது.

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பட்ட போலீசாரின் தற்கொலைகளுக்கு பணிப்பளு மற்றும் மேலதரிகாரிகள் கொடுத்த மன உளைச்சலே காரணம் என்று வழக்கம்போல சொல்லப்படுகிறது..

பணி நெருக்கடியைத்தாண்டி, மேலிடத்தால் அவமானத்துக்குள்ளாக்குவது கீழ்மட்ட போலீசாருக்கு மட்டுமல்ல, மேல் மட்ட அதிகாரிகளுக்கும் உண்டு. உள்துறை செயலாளரால், டிஜிபியால் அழைக்கப்பட்டு நாள் முழுவதும் காக்கவைக்கப்பட்டு பார்க்காமலேயே திருப்பி அனுப்பப்பட்ட அனுபவங்கள் எத்தனையோ உயர் அதிகாரிகளுக்கு உண்டு.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்து டைப்பிலிருந்து முதலில் தமிழக காவல் துறையை விடுவிக்கவேண்டும்.

போலீசாரின் பணி, பணி நேரம், உடல் திறன், மன ஆற்றல், பொதுமக்களை அணுகும் முறை உள்பட விஷயங்களில் காவல்துறையை துறையை சீர்திருத்த இனியாவது துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்..

இல்லாவிட்டால், வேறென்ன? இப்படியாகத்தான் நிலைமை போய்க்கொண்டிருக்கும். இதுபோல சளைக்காமல் நாமும் பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்போம். நீங்களும் படித்தபடி இருப்பீர்கள். இந்த ஒன்றைத்தவிர வேறெந்த பிரயோஜனமும் கிடையாது என்பதே உண்மை.