கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்  அ. குமரேசன்

டைமுறைக் கொள்கை ஒன்றை நான் கடைப்பிடித்து வருகிறேன். என்னிடம் தங்களது திருமண அழைப்பிதழ் கொடுக்க வருவோரிடம், காதல் திருமணமா, பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமா என்று கேட்பேன். இரண்டாவது வகை என்றால், தவிர்க்கவே முடியாதவர்களது மண நிகழ்வுக்குப் போவேனேயன்றி, ஒரு வாழ்த்துச் செய்தி மட்டும்தான் அனுப்பிவைப்பேன். முதல் வகை என்றால், தவிர்க்கவே முடியாத சூழலில் போகாமல் இருப்பேனேயன்றி, நிச்சயமாக நேரில் கலந்துகொள்வேன்.

அண்மையில் அப்படியொரு காதல் மணவிழாவுக்குச் சென்றிருந்தேன். வாழ்த்திப் பேச மேடைக்கு அழைக்கப்பட்ட ஒருவர், காதலோடு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற அறிவுரையைக் கூறிவிட்டு, அதற்கான உவமைக் கதை ஒன்றைக் கூறினார். பலரும் கேட்டு மனப்பாடமாகியிருக்கக்கூடிய கதைதான்:

ஒரு காட்டில் காதல் இணையாக இரண்டு மான் வாழ்ந்து வருகின்றன. அந்தக் காட்டில் வறட்சி வருகிறது. இரண்டு மான்களும் தண்ணீர் தேடி அலைகின்றன. எங்கும் கிடைக்கவில்லை. மயங்கி விழும் நிலைக்கு இரு மான்களும் வருகின்றன. அப்போது ஒரு சிறு பள்ளத்தில் கொஞ்சம் நீர் இருப்பதைப் பார்க்கின்றன. ஆனால், ஒரு மானின் தாகத்தைத் தணிக்கும் அளவுக்குத்தான் அந்த நீர் இருக்கிறது. இரண்டு மான்களும் நீரின் மேல் வாய் வைக்கின்றன. ஆனால் நீரின் அளவு குறையவில்லை, காரணம் தனது இணை பருகட்டும் என்று இரண்டு மான்களுமே நினைத்து, வாய் வைப்பது போல் நடித்து, தண்ணீரை உறிஞ்சாமலே இருந்தன. இறுதியில் இரண்டு மான்களுமே தாகத்தின் தாக்குதலில் மயங்கி விழுகின்றன.

இந்தக் கதையைச் சொல்லி, “இப்படி கணவனும் மனைவியுமாகிய நீங்கள் ஒருவரையொருவர் நேசித்து, விட்டுக்கொடுக்கிற பண்போடு வாழ வேண்டும்,” என்று, இக்கதையைச் சொல்கிற எல்லோருமே சொல்வது போல, அவரும் சொன்னார். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். “ஒவ்வொரு மானும் தனது இணை மான் பருகட்டும் என்று மனதிற்குள் நினைத்ததற்கு மாறாக, இரண்டுமே மனம் திறந்து பேசியிருந்தால், சமமாகப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்திருந்தால், பாதிப்பாதி நீரைப் பருகி, அதனால் கிடைத்த தெம்போடு மேலும் சிறிது தொலைவு தேடிச் சென்றிருக்கலாம்! அப்படிச் சென்றி ருந்தால் நிறைய நீர் உள்ள சுனையைக் கண்டுபிடித்திருக்கலாம்… ஆகவே காதல் தொடர்வது என்பது நேசத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது, இல்லற இணையர் இருவரும் எந்த ஒன்றைப் பற்றியும் சமமாக உட்கார்ந்து பேசி முடிவெடுத்துச் செயல்படுவதாகவும் இருக்க வேண்டும். விட்டுக்கொடுப்பது என்றால் கூட, இருவரில் யாருக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது என்ற அடிப்படையில், பேசித் தெரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பதாக இருந்தால் காதல் அங்கே மேலும் ஒளிரும்,” என்றேன்.

உலக உழைக்கும் மகளிர் தினத்தையொட்டிய சிந்தனையைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்தக் கல்யாண வீட்டு வாழ்த்துக் கதைக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கதையின் நீதி இல்லற இணையர் இருவருக்குமாகச் சொல்லப்படுவதுதான் என்றாலும், வாழ்க்கை நடப்பில் விட்டுக்கொடுப்பது என்ற பண்பை முதலில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்ணின் தலையில்தான் சுமத்தப்பட்டி ருக்கிறது. தானாக அப்படிக் கணவனுக்காக விட்டுக்கொடுக்கிற, பெற்றோருக்காகவும் உடன் பிறந்தோருக்காகவும் தனக்குப் பிறந்தோருக்காகவும் விட்டுக்கொடுத்து வாழ்கிற பெண்ணுக்கே பண்பரசிப் பட்டம்.

ஒரு வீட்டில் அண்ணன் தங்கைக்கிடையே தொலைக்காட்சித் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியைக் கைப்பற்றுவது தொடர்பாகச் சண்டை நடக்கிறது. அண்ணனுக்கு அதிகமாகப் போனால், “ஏண்டா, தங்கச்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே” என்ற அறிவுரை. தங்கைக்கோ, “ஏண்டி, ஒரு பொம்பளைப்புள்ள இப்படித்தான் விட்டுக்கொடுக்காம அடம் பிடிப்பியா” என்ற இடித்துரை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒரு குடும்பச் சண்டை வழக்கில், குழந்தை இருக்கிற வீட்டில் ஒருவர் பணம் சம்பாதிப்பதற்காக வெளியே செல்ல வேண்டும், ஒருவர் குழந்தையைக் கவனிக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னார் நீதிபதி. அதையொட்டி நடந்த தொலைக்காட்சி விவாதத்தில், “குழந்தையைக் கவனிக்கிற பொறுப்பு என்ற கோணத்தில் இக்கருத்தின் நோக்கம் நல்லதுதான் என்றாலும், நமது சமூக நடப்பில் இது யாருடைய சுமையாக மாறும்? பாரம்பரியம், தாய்மைப் பெருமை எல்லாம் பேசிக் கடைசியில் பெண்ணை வீட்டோடு முடக்குவதாகவே அல்லவா முடியும்? ஆகவே, கூட்டுப் பொறுப்பு ஏற்பதை நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்ற கருத்தைச் சொன்னேன் நான். “விட்டுக்கொடுப்பது” என்பது பெண்ணைப் பொறுத்தவரையில் “விட்டுவிடுவது” என்றாகிவிடுகிறது.

குழந்தை வளர்ப்பில் என்றில்லை, எந்தவொரு பிரச்சனை தொடர்பாகவும் நிலைமையின் தன்மை, சூழல்களின் வாய்ப்பு, உடனிருப்போரின் ஒத்துழைப்பு ஆகிவற்றின் அடிப்படையில் இணையர் இருவரும் அமர்ந்து பேசி முடிவெடுத்துச் செயல்படுவதுதான் குடும்ப ஜனநாயகம். இணையர் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள இதர பெரியவர்கள், ஏன் குழந்தைகள் உட்பட உட்கார்ந்து பேசி, ஒத்த கருத்து உருவாகவில்லை என்றால், பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதே மேன்மை மிக்க குடும்ப ஜனநாயகம். இப்படிச் செயல்படுகிற குடும்பங்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அரிதான முன்னுதாரணங்களாகச் சொல்லிக்காட்டுகிற அளவுக்கு இத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மெய் வாழ்க்கையில், குடும்பத்தில் ஒத்த கருத்து ஏற்படவில்லை என்றால், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் “குடுமபத் தலைவன்” என்ற முறையில் ஆணின் கையில்தான் சிக்குகிறது. பெண் தன் உயர்த்திய கையைக் கீழே போட வேண்டிய தாகிறது.

குடும்ப ஜனநாயகம் போலவே, குடும்பச் சுதந்திரம் பற்றிய சிந்தனையும் தலையாயது. நம்மைச் சுற்றிலும் அடிக்கடி நம் காதுகளில் ஒலிக்கிற ஒரு வசனம் உண்டு. பெண்ணின் சுதந்திரம் பற்றிய பேச்சுகளின்போது, “என் மனைவிக்கு நான் நிறையவே சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் தெரியுமா,” என்று கேட்கிற கணவன்மார்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். “என் மகளுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்” என்று பேசுகிறவர்களையும் எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

“நிறையவே சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்” என்றாலே, “மீதிச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்” என்றுதான் பொருள்? முழுச் சுதந்திரத்தை முடக்கிவைத்திருப்பதால்தான் அதிகச் சுதந்திரம் அளித்திருப்பதாகப் பெருமையடித்துக்கொள்கி றார்கள். கணவனோ, தந்தையோ, சகோதரனோ… யார் இப்படிச் சொன்னாலும் சரி, அதிலே ஒரு ஆணவம் மறைந்திருக்கிறது.

சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் கொடுத்து வருவதா என்ன? அது இயற்கையாக இருப்பது. அதைக் கட்டுப்படுத்தாமல் இருந்தாலே போதும். இயற்கையாக இருக்கிற நீர்வளத்தை செயற்கையாகக் கெடுப்பது போல, இயற்கையாக இருக்கிற காற்றை செயற்கையாக மாசு படுத்துவது போல, இயற்கையான சுதந்திரத்தை ஒடுக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் நேர்மை, குடும்பச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது. பெற்றோர் இருவருமாகச் சேர்ந்து, “எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் நிறையச் சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்,” என்று சொல்லிக்கொள்வதுண்டு. அதற்கும் இது பொருந்தும்.

ஒரு நண்பரின் இல்லத்தில் மகளின் திருமணப் பேச்சைத் தொடங்கினார்கள். அவள் ஒப்புக்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக என்னிடம் சொல்லிப் புலம்பினார்கள். அவர்களது வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது, என்னையும் தன் தகப்பனாகக் கருதி நேசிக்கிற அந்த மகளிடமிருந்து, காதல் வசப்பட்டிருப்பது பற்றிய உண்மை வெளிவந்தது. பெற்றோர் இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள். தாய் இரட்டிப்பு அதிர்ச்சியடைந்தார். எனக்கானால், “இதை ஏன் என்னிடம் இத்தனை நாள் சொல்லாமல் மறைத்தாய்,” என்ற ஆதங்கம்தான் முன்னுக்கு வந்தது!

அப்போது அந்தத் தாய், ”இவளுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது தப்பாப்போச்சு,” என்றார். அந்த இடத்திலும் சுதந்திரம் என்பது நீங்கள் கொடுப்பதல்ல என்று சொல்லி அவர்களை மிரளவைத்தேன்! தொடர்ந்து பேசி, மறுபடி மறுபடி தலையிட்டு, அவர்களின் உறவு வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற, முற்போக்கான சிந்தனைகள் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, அவரையும் தலையிட வைத்து, ஒரு வழியாக மகளின் காதலுக்கு மரியாதை கிடைத்தது.

இங்கே இரண்டு நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு விதிவிலக்கான குடும்பம். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் காதலுக்கு, குறிப்பாக மகள்களின் காதலுக்குப் பச்சைச் கொடி காட்டப்படுவதில்லை. அதிலும், இந்தியச் சமுதாயத்தின் சாதிக்கட்டுமானத்தில், “காதலன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்” என்றால் ஆகப்பெரும்பாலும் அதற்கு முட்டுக்கட்டைதான் போடப்படும். சில நேரங்களில் உருட்டுக்கட்டைகளும். பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தாயிடமிருந்தே புறப்படும். இரண்டு வகையில் தாயின் எதிர்ப்பு வெளிப்படும். ஒன்று, உன்னைக் கொன்றுபோடுவோம் என்ற அச்சுறுத்தல். இரண்டு, நாங்கள் செத்துப்போவோம் என்ற மிரட்டல். இப்படிப் பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்கி, பெண்ணின் மூலமாகவே பெண்ணின் சுதந்திரத்தை முடக்குவதுதான் ஆணாதிக்கத்தின் நுட்பமான வெற்றி.

காதலுக்குத் தடை விதிக்கப்படுவதன் மூலம், பெண் தனது வாழ்க்கை இணையைத் தானே தேர்வு செய்கிற சுதந்திரம் பறிக்கப்படுவது ஒரு அநாகரிகமான மனித உரிமை மீறல். கலாச்சாரப் பெருமைகளின் ஒப்பனைகளோடு இந்த மனித உரிமை மீறல் காலங்காலமாகத் தொடர்கிறது.

சொந்தத்துக்குள்ளேயே திருமணம், சாதிக்குள் திருமணம், ஜாதகம் பார்த்துத் திருமணம் என்றெல்லாம் “சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்” திருமணங்களில் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும், வயதுக்கு வந்தோரின் – குறிப்பாகப் பெண்களின் – இணைத் தேர்வு உரிமை யிலும் சுதந்திரத்திலும் அமிலம் ஊற்றுகிற வேலைதான். இந்த அமிலத்தோடு இணைந்ததுதான் சாதி, மத ஆணவக் கொலைகள். காதலைக் கொல்ல முடியாது என்பதால் காதலர்களையே கொல்கிற வன்மம்.

மிக இளம் வயதிலேயே பெண் ஒரு தாயாகக் குழந்தையைச் சுமக்க வைக்கப்படுவது, அதற்கொரு முன் பயிற்சியாகக் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு சற்றே வயது கூடிய பெண் குழந்தைகளிடம் ஒப்படைக்கப்படுவது, அதற்காகப் பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்படுவது, சிறுமிகளின் விளையாட்டு உரிமை குழந்தையோடுதான் என இடுப்பில் ஏற்றப்படுவது, ஊட்டச்சத்து உணவில் கூட பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவது, வேலைக்கும் போய் குடும்பத்தையும் கவனிக்கிற பெண் ஏதாவது உரக்கப்பேசிவிட்டால் “சம்பாதிக்கிற திமிர்” என்று பட்டயம் மாட்டப்படுவது, இப்போதுதான் பெண்கள் எல்லாத் துறைகளுக்கும் ஆண்களுக்குப் போட்டியாக வந்துவிட்டார்களே என்று மேலோட்டமான காட்சியின் மூலம் உண்மை நிலவரம் மறைக்கப்படுவது, விதிவிலக்குகள் தவிர்த்து அரசியல் உள்ளிட்ட பொது வெளிகளில் பெண்ணுக்கான முழு இடம் மறுக்கப்படுவது… இப்படியான செயற்பாட்டு வினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதனால் பெண்களும் பெண்ணுரிமைக்காக வாதாடுவோரும் தங்களது செய்வினைகளிலிருந்து பின்வாங்கத் தேவையில்லை. இவையெல்லாம் நடப்புகளாக உள்ள இதே சமுதாயத்திலிருந்துதான் இதற்கெல்லாம் மாற்றம் உண்டு என்ற உறுதியோடு கூடிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகளின் பலனாகவே சட்டப்புத்தகங்களில் பெண்ணுரிமைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதைச் சாத்தியமாக்கியவர்கள் கண்ணகிகள் மட்டுமல்லாமல் புத்துயிர் பெற்று அவர்களோடு தோள் சேர்ந்த கோவலன்களும்தான். அயராமல் தொடர்கிற இந்தக் கூட்டுப் போராட்டங்கள் அந்தச் சட்டப்பூர்வ உரிமைகளை வாழ்க்கை இயல்புகளாக மாற்றிக்காட்டும்.