சமீப ஆண்டுகளில், தமிழகத்தையே உலுக்கிய விவகாரம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும், அதிமுக அதிகார மையங்களுடன் தொடர்புடையவர்களும் இதில் சந்தேகிக்கப்பட்டார்கள்.

இந்த விஷயத்தை, ஆளும் அதிமுக முடிந்தளவிற்கு மூடி மறைக்கப் பார்த்தது. இந்நிலையில், கடும் நெருக்கடி காரணமாக, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால், அப்போதும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. நத்தை வேகத்தில் நகர்ந்து வந்தது சிபிஐ விசாரணை.

ஆனால், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில், அதிமுக – பாஜக இடையே பல விஷயங்களில் தீவிரமான லடாய் ஓடிக்கொண்டிருக்கும் இச்சூழலில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிஐ அமைப்பால், பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் அருளானந்தம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர், அமைச்சர் வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

கைது செய்யப்பட்டவுடன், அருளானந்தத்தை, அவசர அவசரமாக அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த கைது அதிமுகவின் இமேஜை மேலும் டேமேஜ் செய்துள்ளது.

தேர்தல் தொடர்பாக எங்களின் கட்டளைகளுக்கு அடிபணியவில்லை என்றால், இதுபோன்ற நிறைய அதிரடிகளை அரங்கேற்றி உங்களை நாறடிப்போம் என்று பாஜக தலைமை, அதிமுக தலைமைக்கு விடுக்கும் எச்சரிக்கையா? என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.