டில்லி

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில்  பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

நேற்றைய ஐ பி எல் 2023 போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  இதில்  டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

ஒரு பக்கம் பிரப்சிம்ரன் சிங் நின்று விளையாடினாலும் எதிர்புறம் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.  குறிப்பாக சாம் கர்ரன் 20 ரன்களிலும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களில் பெவிலியன் திரும்பிய போதிலும், ஆறு சிக்சர்கள் விளாசி பிரப்சிம்ரன் சிங் நின்றிருந்தார். தனது  17-வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 141 ரன்களை சேர்த்திருந்தது. பிஏகு அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 103 ரன்களை குவித்த பிரப்சிம்ரன் சிங்கை 18ஆவது ஓவரில் அவுட்டாக்கினார் முகேஷ்குமார்.

ஷாருக்கான் 2 ரன்களில் ரன் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 167 ரன்களை சேர்த்திருந்தது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், முகேஷ் குமார், பிரவீன் தூபே, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பிறகு 168 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி, தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர் பிளே வரை நீடித்த ஓப்பனிங் இணை 69 ரன்கள் வரை எடுத்தபோது பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விரைவாகவே அவுட் ஆகி நடையைக் கட்டினர். கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடினாலும், அவருக்கு பக்கபலமாக யாரும் நிற்கவில்லை.

வார்னர் மட்டும் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் எளிதான இலக்கை துரத்திய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றது.  பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 4 விக்கெட்டும், நேதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சஹர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.