மும்பை:  நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களில் 3 வெற்றியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது புதிதாக களமிறங்கிய லக்னோ அணி. ஆட்டநாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. திகபட்சமாக பிருத்வி ஷா 61, கேப்டன் பந்த் 39, சர்ஃபராஸ் கான் 36 ரன்களை எடுத்தனர். லக்னோ அணி பந்துவீச்சு சார்பில் ரவி பீஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லக்னோ அணிக்கு, ஓப்பனர்களான டி காக், கேப்டன் கே.எல். ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எவின் லீவிஸ் 5 ரன்களுக்கு நடையைக்கட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்களுக்கு குல்தீப் யாதவ்விடம் வீழ்ந்தார். இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ அணி.