டில்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான  வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய 22ந்தேதி வரை தடை விதித்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உச்சநீதி மன்றம் 26ந்தேதி வரை தடையை  நீட்டித்துள்ளது.

மேலும் வழக்கை டில்லி உயர்நீதி மன்றத்தில் இருந்து உச்சநீதி மன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், 20ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கார்த்தியின் வழக்கறிஞர் கபில்சிபல் 20ந்தேதி ஆஜராக முடியாது என்று தெரிவித்த நிலையில், தடையை மேலும் 2 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தலைமநீதிபதி தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.யு.சந்திரசூட்  தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது,  இன்று டில்லி உயர்நீதி மன்றம் தடையை நீட்டித்தது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது, வழக்கை  26ந்தேதி ஒத்தி வைப்பதாக அறிவித்தும், அதுவரை  கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிப்பதாகவும் அன்றைய தினத்தின்போது,  பிஎம்எல்ஏ (PMLA)ன் 19 வது பிரிவின் விளக்கம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றத்தில் இருந்த உச்சநீதி மன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளது.