கோவை

உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்குப் பெற்ற வேட்பாளர் தமக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி 9ஆம் வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்து அதற்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

இங்கு திமுக 387 வாக்குகள், அதிமுக 196 வாக்குகள், சுயேச்சைகள் 240 மற்றும் 84 வாக்குகள் பெற்றிருந்தனர்.  இங்குப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தீ. கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்,  அதாவது அவரது குடும்பத்தினரும் அவருக்கு வாக்களிக்கவில்லை.  இதை பாஜகவின் உலக சாதனை என சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

கார்த்திக் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நான் முயற்சி செய்து பார்ப்பதற்காக 9வது வார்டில் நின்றேன். எனக்கு ஒரு ஓட்டு கிடைத்ததையே வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன்.  சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி எழுதுபவர்கள் குறித்து காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என இருக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.