திருச்சி

டெங்கு காய்ச்சலால் திருச்சி மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு ந்படிப்படியாக் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ஆனால் அவர்கள் மகிழ்ச்சியைப் பாழாக்கும் வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.   இதுவரை இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.    டெங்கு வைரஸ் புதிய மாற்றத்தை அடைந்துள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.

கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஒன்றாக உள்ளதால் கண்டறிவது சிரமமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.   தமிழகத்தில் இதுவரை டெங்குவால் 342  பேர்  பாதிப்பு அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா  இம்மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காகப் பிரத்தியேக வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை சுமார் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 10 நாட்களுக்கு முன்னரே ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இன்று 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், தொண்டைப் புண், மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு ஆகியவை ஆகும்.  ஆகவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.