டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும், எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாவுமணி அடித்துள்ளது.

தீர்ப்பு காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்ற ஷரத்தும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

,இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையொட்டி, இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிடக்கோரி எடப்பாடி தரப்பு உச்சநிதிமன்றத்தை நாடியது. அப்போது, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தைக்கேட்டு,  அவைத்தலைவர் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்களை பெற்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு தாக்கல் செய்தது.

அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக  2ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது. அவை இணைய தளத்

இதனால் அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி ஆதரவு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு தேர்தலில் இருந்து பின்வாங்கியது

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில், இன்று (பிப்ரவரி 23ந்தேதி) பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில்,

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறியதுடன்,  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என கூறி உள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் தாக்கல் செய்த  மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாவுமணி அடித்துள்ளது.