மாமல்லபுரம்

நடைபெற்று வரும் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று இந்திய ஆதிக்கம் தளர்ந்து காணப்பட்டது.

சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர்  பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது.  இதில் தொடர்ந்து முதல் மூன்று நாட்களாக இந்தியா வெற்றி வாகை சூடி வந்தது.  நேற்று இந்த போட்டிகளின் 4 ஆம் நாள் ஆட்டம் நடந்தது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணி பிரான்ஸுடன் மோதியது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கார்னெட் மாத்தியூக்கு எதிரான ஆட்டத்தை 30-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார்.

இதை போல் ஹரிகிருஷ்ணா பென்டலா 52-வது நகர்வின் போது மவுஸார்ட் ஜூல்ஸுக்கு எதிரான ஆட்டத்தையும், விதித் குஜராத்தி 31- வது நகர்வின் போது ஃப்ரெசினெட் லாரன்ட்டுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர்

எஸ்.எல்.நாராயணனும் 51-வது நகர்வின் போது லகார்டே மோஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய ஏ அணி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது.

இந்திய பி அணி இத்தாலியுடன் மோதியது. இதில் இந்தியாவின் சத்வானி ரவுனக், சோனிஸ் பிரான்செஸ்கோவுக்கு எதிரான ஆட்டத்தை 30-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய டி.குகேஷ் 34-வது நகர்வின் போது வோக்துரா டேனியலை தோற்கடித்தார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சரின் நிகில் 51-வது நகர்வின் போது மொரோனி லூகா ஜூனியரை வீழ்த்தினார். ஆர்.பிரக்ஞானந்தா 42-வது நகர்வின் போது லோடிசி லோரென்சோவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் இத்தாலி அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது இந்திய பி அணி.

இந்திய சி அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கங்குலி சூர்யா சேகர், ஷிரோவ் அலெக்ஸிக்கு எதிரான ஆட்டத்தை 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார்.

அதேவேளையில் எஸ்.பி.சேதுராமன் 31-வது நகர்த்தலின் போது வல்லேஜோ போன்ஸ் பிரான்சிஸ்கோவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். குப்தா அபிஜீத் 41-வது நகர்வின் போது அன்டன் குய்ஜாரோ டேவிட்டிடம் தோல்வியடைந்தார்.

கார்த்திகேயன் முரளி, சாண்டோஸ் லதாசா ஜெய்ம் மோதிய ஆட்டம் 52-வது நகர்வில் டிராவில் முடிவடைந்தது. இதனால் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சி அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.