இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது! மோடி மீது ராகுல் தாக்கு

டில்லி,

டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

மோடி அரசு அறிவித்துள்ள பணமதிப்பிழப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உள்பட முன்னாள் காங்கிரஸ் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள்,  க்கிய நிர்வாகிகள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி வரவில்லை. அதன் காரணமாக ராகுல் காந்தி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் சிறப்புஉரை ஆற்றிய ராகுல் காந்தி,

மோடியின்  பணம் மதிப்பிழப்பு அறிவிப்பால் இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  நாட்டில் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாக  வளர்ந்து வந்த பல நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது.

பிரதமர் மோடி அனைவரையும் ஸ்வாச் பாத்தில் சேருங்கள் என்று சொன்னார், ஆனால் அவரது நாடகம் சில நாட்களே தொடர்ந்தது என்றார்.

பணமதிப்பிழப்பினால், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் எப்போது தீரும் என மக்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால், 2019ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்போதுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலி தீரும் என்றும் கூறினார்.

பணம் மதிப்பிழப்பு குறித்து, மோடி எடுத்த  தனிப்பட்ட முடிவால் நாடும், நாட்டு மக்களும் இந்த அளவுக்கு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசும்போது,

கடந்த நவம்பர் 8ந்தேதி ரூ.500, 1000 செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை (கேபினட்)  கூட்டம் நடைபெற்றதாக பிரதமர் மோடி கூறினார்.

ஆனால், அவ்வாறு ஒரு கூட்டம் நடைபெற்றதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பேசினர்.