டில்லி,

ரூபாய் நோட்டு தடை செய்து அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டில் பயங்கரவாதம் நின்றுவிட்டதா என்று பாரதியஜனதாவின் கூட்டணி கட்சி கேள்வி விடுத்துள்ளது.

பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா, மோடியின் நோட்டு தடை  அறிவிப்பு,  பயங்கர வாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்தும் என்று கூறினார்.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் எத்தனை ராணுவ வீரர்கள் நமது நாட்டு எல்லையில் பலியாகி உள்ளனர் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மராட்டியை சேர்ந்த சிவசேனா கட்சி நாளிதழ் ‘சாம்னா’வில் எழுதியுள்ளதாவது,

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ந்தேதி அறிவித்தார். அவர் பேசும்போது, இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்றும், பயங்கர வாதிகளுக்கு நிதி செல்வதை கட்டுப்படுத்தும் என்று கூறியிருந்தார்.

ஆனால், ரூபாய் நோட்டு தடையால் பயங்கரவாதிகளின் செயல்கள் கட்டுப்படவில்லை. நாட்டின் எல்லைகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாககூட  ஜம்மு மாவட்டம் அக்னூர் பகுதியில் உள்ள ரிசர்வ் பொறியியல் படை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதை மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா?

முன்னர் பயங்கரவாதிகள் பொதுமக்களையே குறிவைத்து தாக்கினர். ஆனால், தற்போது ராணுவ மையங்களையும், வீரர்களையுமே தாக்கி வருகின்றனர்.  மணிப்பூரில் கூட தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தியுள்ளனர்.

இதைத்தான் மோடி அறிவித்த மாற்றம் என்று எடுத்துக்கொள்ளவா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 32 வீரர்களும், 2015ம் ஆண்டு 33 வீரர்களும் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள நிலையில்,  கடந்த ஆண்டு 60 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த செயல்களுக்கு பாகிஸ்தானுக்கு பங்கு இல்லை என்று எப்படி நாம் நம்ப முடியும்?.

ஆனால், மத்தியஅமைச்சர் மனோகர் பாரிக்கர், சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் ஆர்.எஸ்.எஸ். பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்துவிட்டது என்று உத்தரப்பிரதேச தேர்தல்  பிரசாரத்தில் பேசி இருக்கிறார்.

தாக்குதல் தொடர்பான விசயத்தில் யாரும் ராணுவத்தினரை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது. சர்ஜிகல் ஸ்டிரைக் ராணுவம் நடத்தியது, ஆனால், அனைத்து பெருமைகளை யும் பாரதிய ஜனதா கட்சி எடுத்துக்கொண்டு விட்டது.

ரூபாய் நோட்டு தடை என்பது இப்போது தேசிய முக்கியத்துவம் பெற்றதைக் காட்டிலும், அரசியல் விஷயமாக மாறிவருகிறது.

ரூபாய் நோட்டு தடைக்கு பின் எல்லையில் எத்தனை வீரர்கள் இறந்தனர் என்பதை மத்திய அரசு  தெரிவிக்க வேண்டும், ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசியல் செய்வதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள  வேண்டும்.

பாரதிஜனதா கட்சிக்கு துணிச்சல் இருந்தால் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு சாம்னாவில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.