டெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்தை  திரும்பப் பெற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மசோதாவில்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளது.  இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டது.

டெல்லி ஜாமியா மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து,  நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சி கள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தும் முறையிட்டனர்.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற  இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற முடியாது என்றவர், அதை திரும்ப பெறும்  பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு பாறையை போல உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

இந்த சட்டத்தில் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை என்று கூறியவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன என்று கூறியவர்,  டெல்லியில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

“மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டு, சிறுபான்மையினர் அங்கு மதத்தின் பெயரால் துன்புறுத்தப்படுகையில், நீங்கள் அவர்களுக்கு உங்கள் குடியுரிமையை வழங்க மாட்டீர்களா?” . “அவர்கள் எங்கு செல்வார்கள்?” என்று அவர் கூறினார், சட்டத்தை ரத்து செய்வதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

ராகுல்காந்தி வீர சவர்க்கராக  ஆக நினைத்துக்கண்டிருக்கிறார்,  அதற்கு நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பும் தேவை. ஆவரால் வீரசவர்க்கராக ஆக முடியாது என்று தெரிவித்து உள்ளார்.