டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக, இந்த தடுப்பூசிகள் விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் மற்றும், சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியும் பெரும்பங்காற்றி வருகின்றன.  தடுப்பூசி செலுத்தும் பணி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப்பணியாளர் களுக்கும் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்ட நிலையில், அடுத்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. பின்னர்  அடுத்த சில மாதங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயது மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு அடுத்தக் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 69.03 கோடி பேருக்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50.2 சதவிகிமாகும்.

இந்த நிலையில், இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம்  கோவிஷீல்டு  மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்குஅனுமதி அளித்துள்ளது.  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில்  வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம்  விண்ணப்பித்திருந்தது.

இவற்றை ஆராய்ந்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய வல்லுநர் குழு, இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் விலை குறித்து விரைவில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், விரைவில் நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வர உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூ விரை ரூ.275 ஆக நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.