திவாலாகும் இந்திய ரயில்வே!! முன்னாள் அமைச்சர் பகீர்

Must read

டெல்லி:

ரயில்வே வெறும் நிதிபிரச்னை இல்லை அது திவாலாக கூடிய அளவுக்கு நெருக்கடி சூழ்நிலையில் இருப்பதாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் , ‘‘கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான நிலையில் ரயில்வே துறையின் செயல்பாடு கவலை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறை நிதிபிரச்னையில் மட்டும் சிக்கி தவிக்கவில்லை. அது திவாலாகும் நிலையில் உள்ளது. விரைவில் ஊழியர்கள் சம்பளத்திற்காக கடன் வாங்கும் நிலை ஏற்படவுள்ளது.

ரயில்வேயில் இயக்குதல் விகிதாச்சாரம் 96.9 சதவீதம் என்ற அடிப்படையில் இருப்பது மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரியவாய்ப்பில்லை. இது புரளியாக வந்தாலும் , நம்ப வேண்டிய நிலை தான் உள்ளது. ஆனால், உண்மையிலேயே இயக்குதல் விகிதாச்சாரம் 110 சதவீதத்திற்கு மேல் உள்ளது. அதாவது 100 ரூபாய் சம்பாதிக்க ரூ. 110 முதலீடு செய்யும் நிலையில் தான் ரயில்வே உள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘ரயில்வேயில் கணக்குகள் குறித்து நான் பேசவில்லை. செலவுகளை எந்த தலைப்புகளின் கீழ் கொண்டு வருவது என்பதில் தான் சிக்கல் உள்ளது. இதனால் தான் இயக்குதல் விகிதாச்சாரம் இந்த நிலையில் உள்ளது. ரயில்வேயில் கணக்கு முறை சிறந்ததாக இல்லை. கார்பரேட் கணக்கு நடைமுறையை அது பின்பற்றவில்லை. ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள நிதி ஆணையரை சார்ந்தே பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

2015-16ம் ஆண்டின் மொத்த பட்ஜெட்டில் ரூ.16 ஆயிரத்து 752 கோடியும், 2016-17ம் ஆண்டில் 6 ஆயிரத்து 300 கோடியும் பற்றாகுறை ஏற்பட்டது. அதேபோல் உபரி வருவாயும் 2015-16ம் ஆண்டில்10 ஆயிரத்து 506 கோடியும், 2016-17ம் ஆண்டில் 7 ஆயிரத்து 695 கோடியும் குறைந்துள்ளது’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘2015-16ம் ஆண்டில் நிலக்கரி கையாளுதல் மூலம் சரக்கு வருவாயில் 45 சதவீதம் கிடைத்தது. 2016-17ம் ஆண்டில் இது 19 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் ந டைமுறை செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் 2016-17ம் ஆண்டில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 960 கோடியாக இருந்த பட்ஜெட், 2017-18ம் நிதியாண்டிற்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 350 கோடியாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நடைமுறை செலவுகளை வருவாய் செலவுகளின் கீழ் கொண்டு வருவதா? அல்லது மூலதனத்தில் கொண்டு வருவதா? என்ற குழப்பம் நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் ரயில்வேயை இயக்கும் விகிதாச்சாரம் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

* பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்தது மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவு குறைந்துள்ளது.
* பராமரிப்பு செலவினங்கள் வருவாயில் இருந்து மூலதனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தேய்மானம், கையிருப்பு நிதி, மேம்பாட்டு நிதி, பாதுகாப்பு நிதியும் மாற்றப்பட்டுள்ளது.
* தண்டவாள பராமரிப்பும், தண்டவாள புதுப்பித்தலும் ஒரே கணக்கின் கீழ் வருவதில்லை. இது மூலதன கணக்கில் வருவது கிடையாது.
* பணிமனை சிக்னல் பணிகள் மூலதனத்தில் வருவதில்லை.
தண்டவாள பணியாளர்கள், மின்மயமாக்கல் போன்றவற்றின் 50 முதல் 60 சதவீத ஊழியர்கள் சம்பளம் கையிருப்பு நதி கணக்கில் கீழ் வருகிறது.
* திறந்த வெளி தண்டவாள அமைப்பு பணிகளுக்கான சம்பள செலவு நூறு சதவீதம் மூலதனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உறுதிப்படுத்த கையிருப்பு நிதிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி சராசரியாக தேவை. ஆனால் இது வருவாய் செலவினங்களில் உள்ளது. இது தான் ரயில்வே இயக்குதல் விகிதாச்சாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
தேய்மான நிதி இல்லாமை காரணமாக பழைய தண்டவாளம், சிக்னல், உருளும் பொருள்ட்கள் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என்று தெரிவித்தார்.

தினேஷ் திரிவேதி தொடர்ந்து பேசுகையில், ‘‘மேம்பாட்டு நிதிக்கு தனி கதை இருக்கிறது. 2016-17ம் ஆண்டில் பட்ஜெட்டில் வருவாய் துறை சார்பில் 1.74 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகள் சில தவறான கணக்கீடுகளை மேற்கொள்வதாக ஆடிட்டர் ஜெனரல் தனது அறிக்கையில் பல முறை குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திவாலாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இயக்குதல் விகிதாச்சாரத்தை நேர்மையாக கணக்கீடு செய்தால் 120 சதவீதத்திற்கு மேல் இருக்கும். இந்தியன் ரயில்வேயை நவீன போக்குவரத்து முறையாக உண்மையிலேயே உருவாக்க வேண்டும் என்றால் ஒழுங்கான கணக்கீடு செய்து உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். வருவாய் தரக் கூடிய அம்சங்களில் பெருமளவில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை ரயில்வேயும், நிதித்துறையும் நேர்மையான முறையில் செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘இது நடந்தால் எதிர்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் ரயில்வேயின் பங்கு 2 சதவீதமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டு பட்ஜெட்களை இணைத்ததன் மூலம் எவ்வித தீர்வும் கிடைக்காது. அதேபோல் ரயில்வேக்கான முதலீடு திட்டங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். நான் அமைச்சராக இருந்த போது செய்த திட்டங்களால் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

More articles

Latest article