புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் 660-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு முன் இந்தியாவில் சராசரியாக ஒருநாளைக்கு 1768 ரயில்கள் இயக்கப்பட்டு வந்ததாக இந்திய ரயில்வே கூறியிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அவசர மற்றும் சரக்கு போக்குவரத்து ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டுவந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ரயில் சேவைகள் கணிசமாக இயக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 983 ரயில்கள் ஒரு நாளைக்கு இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே கூறியுள்ளது. அதாவது கொரோனாவுக்கு முந்தைய ரயில் சேவையில் 56 சதவீதம் ஆகும்.

தற்போது கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்துள்ளது. எனவே ரயில் சேவைகள் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகின்றன என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்திய ரயில்வே கூறியிருப்ப தாவது, ‘ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி 800 ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. கூடுதலாக 660 ரயில்கள் இயக்க ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 552 ரயில்கள் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகும். 108 சிறப்பு விடுமுறைக் கால ரயில்கள்’ எனக் கூறியுள்ளது.

கொரோனா பரவலின் நிலை மற்றும் ரயில் பயணங்களுக்கான டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் ரயில்களின் சேவையைப் படிப்படியாக செயல்படுத்த மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறப்பு ரயில்களை மீண்டும் செயல் படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து சென்னை எழும்பூர் -தஞ்சாவூர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், கோயமுத்தூர்-நாகர் கோயில் மற்றும் புனலூர்-மதுரை ஆகிய ரயில்கள் ஜூன் 20, 21 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் வட கிழக்கு ரயில்வேவும் சில சிறப்பு ரயில் களை இயக்க உள்ளதாகக் கூறியுள்ளது.

ரயிலில் பயணிப்பவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின் பற்ற வேண்டும் என்று ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.