கொல்கத்தா: மனோவலிமை என்று வருகையில், இங்கிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வீரர்களோடு ஒப்பிடுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, கொரோனா தொடர்பான உயிர்-குமிழி என்று வருகையில், ஒவ்வொருவருக்குமே கடினம்தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில், கிரிக்கெட் வீரர்கள் உயிர்-குமிழி என்ற கட்டுப்பாட்டு வட்டத்திற்குள் இருக்க வேண்டியுள்ளது. அதாவது, அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் மைதானத்திற்கு மட்டுமே செல்ல முடியும்.

தற்போது ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, “இந்திய கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் சக வெளிநாட்டினரோடு ஒப்பிடுகையில், அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள்.

நான், அதிகளவில், ஆஸ்திரேலியர்கள், இங்கிலாந்து நாட்டினர் மற்றும் மேற்கிந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். ஆனால், உளவியல் பலம் என்று வருகையில், அவர்கள் எளிதில் வீழ்ந்து விடுவார்கள். ஆனால், இந்தியர்கள் அப்படியல்ல.

கடந்த பல மாதங்களாக, உலகின் கிரிக்கெட் நடவடிக்கைகள் உயிர்-குமிழி என்ற வட்டத்திற்குள் அடைபட்டிருக்கிறது. வெறுமனே ஹோட்டல் மற்றும் மைதானம் என்று மட்டுமே அடங்கியிருப்பது அதிக மனஇறுக்கத்தை ஏற்படுத்தும். இது முற்றிலும் வித்தியாசமான ஒரு வாழ்க்கை.

இந்த சூழலுக்கு அஞ்சியே, ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டது. ஆனால், இந்தியர்கள் எதையும் எதிர்கொள்கிறார்கள்” என்றுள்ளார் கங்குலி.