இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு: என் பி டி சி அறிக்கை

Must read

டெல்லி

கடந்த ஆண்டு இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக என் பி டி சி என்ற  தேசிய அளவில் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை பதிவு செய்யும் மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் நடக்கும் குண்டுவெடிப்புகளையும், அவற்றுக்கான காரணங்களையும்  ஆய்வு செய்யும் அமைப்புதான் என் பி டி சி என்பது. இது தேசிய பாதுகாப்பு அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.   சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிக்கையில்,  கடந்த ஆண்டு  ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற உள்நாட்டுப்பிரச்னைகளில் சிக்கியிருக்கும் நாடுகளை விட இரண்டு மடங்கு குண்டுவெடிப்புகள் இந்தியாவில் நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 161 குண்டு வெடிப்புகளும், ஆப்கானிஸ்தானில் 132 குண்டுவெடிப்புகளும் பதிவாகியுள்ளன.

92 முறை துருக்கியிலும்  , 71 முறை தாய்லாந்திலும், 63 முறை தென் ஆப்ரிக்காவிலும், 56 முறை சிரியாவிலும், 42 முறை எகிப்திலும், 29 முறை பங்களாதேஷிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும்  406 முறை குண்டு வெடிப்புகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசயத்தில் உலக நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஒரு வியாழக்கிழமை அன்று 63 குண்டுவெடிப்புகளும், ஒரு புதன்கிழமையன்று 50 குண்டு வெடிப்புகளும் நடந்துள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத்தகவல் அனைத்தும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

More articles

Latest article