புனே: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 317 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராத் கோலி 56 ரன்களையும், கேஎல் ராகுல் 62 ரன்களையும், கருணால் பாண்ட்யா 58 ரன்களையும் அடித்து, இந்தியாவுக்கு வலு சேர்த்தனர்.

பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டம் மிரட்டும் வகையில் அமைந்தது. குறிப்பாக பேர்ஸ்டோ நிலைமையையே மாற்றினார். அவர் 66 பந்துகளில், 7 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

ஜேஸன் ராய் 46 ரன்களுக்கு அவுட்டானதும், கேப்டன் இயன் மோர்கன் 22 ரன்களுக்கு காலியானதும், பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுக்கு பெவிலியன் சென்றதும் இங்கிலாந்தை நிலைகுலைய செய்தது.

அதன்பிறகு மொயின் அலி தாக்குப்பிடித்து 30 ரன்களை அடித்தார். ஆனால், அதன்பிறகு இங்கிலாந்து அணியால் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.

முடிவில், 42.1 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி, 251 ரன்களே எடுத்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா தரப்பில், அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா, 8.1 ஓவர்களில், 1 மெய்டன் உள்ப்ட, 54 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷர்துல் தாகுர் 6 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் 9 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். கருணால் பாண்ட்யாவுக்கு 1 விக்கெட் கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.