இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார்.

ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் கம்போடியாவுக்கு மட்டும் நேரடி விமான சேவை இல்லை எனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக நேரடி விமான சேவை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு விமான போக்குவரத்து நிறுவன அதிகாரி டெல்லி – பினோம் பென் மற்றும் சென்னை – சியம் ரீப் இடையே விமான போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கம்போடிய தூதர் குவோங் கொய் கம்போடியா மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் வலுப்பெற நேரடி விமான போக்குவரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதி அல்லது 2024 துவக்கத்தில் இந்தியா – கம்போடியா இடையே நேரடி விமான சேவை துவங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.

2022-23 நிதியாண்டில் இந்தியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான வர்த்தகம் $366 மில்லியனாக இருந்தது இது மேலும் அதிகரித்து வருகிறது.

கம்போடியாவில் இந்திய முதலீடுகள் சுமார் $115 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இவை குறிப்பாக மருந்து தயாரிப்பு, ஆட்டோமொபைல் மற்றும் சுரங்கத் தொழிலில் அதிகளவு உள்ளதாகக் கூறப்படுகிறது.