காட்மண்டு

நேபாளம், இந்தியா மற்றும் திபெத் இடையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்பதால் இந்தியா வெளியேற வேண்டும் என நேபாள பிரதமர் ஒலி கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  இதையொட்டி புதிய இந்திய வரைபடம் வெளியிடப்பட்டது.  அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளும் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.   அத்துடன் நேபாள நாட்டின் காலாபானி பகுதியும் இந்திய எல்லைக்குள் உள்ளதாக அந்த வரைபடத்தில் காட்டப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் காலாபானி பகுதி நேபாள எல்லைக்குள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டது.  அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “எங்கள் வரைபடம் இந்தியாவின் முழு வரைபடமாகும்.  இதில் நேபாள நாட்டு எல்லைகள் மாற்றப்படவில்லை.  நேபாள நாடு எல்லை விஷயமாக ஏதும் எதிர்ப்பு தெரிவித்தால் அதை நாங்கள் இருதரப்பு பேச்சு வார்த்தை மூலம் விளக்குகிறோம்” எனத் தெரிவித்தது.

இந்தியாவை எதிர்த்து நேபாள நாட்டில் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  நேபாள நாட்டின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியான நேபாள யுவ சங்கம் நடத்திஉஅ பொதுக்கூட்டத்தில் நேபாள பிரதமர் ஒலி கலந்துக் கொண்டு  பேசி உள்ளார்.

அவர்“காலாபானி பகுதி நேபாள நாட்டைச் சேர்ந்ததாகும்.  எங்கள் நாட்டின் ஒரு அங்குலத்தையும் வேறு நாடுகளுக்கு விட்டுத் தர மாட்டோம்.  இந்தியா அந்தப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.  இந்தியா ஏதாவது பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் காலாபானி பகுதியில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு பேச்சு வார்த்தை நடத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.