விசாகப்பட்டினம்:

உயி ர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது என்றும், ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

உலக எய்ட்ஸ் தினமான இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் எய்ட்ஸ் நோய் துறை நிபுணரான குட்டிகுப்பாலா சூர்ய ராவ் பங்கேற்று பேசினார்.

உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர் சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமது நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போதிய தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது வருத்தத்துக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், போதிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளாததால் 60 சதவீதம் எய்ட்ஸ் நோயாளிகள் பலியாகும் அவலம் நேர்வதாகவும் குட்டிகுப்பாலா சூர்ய ராவ் குறிப்பிட்டுள்ளார்.